பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் கவிதை வானில் முழுநிலவாய் விளங்கியவர். பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர். பிறவிச் சிந்தனையாளர். கவிதை உலகில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாது விளங்கியவர். பாரதியின் சிந்தனைக்கு மெருகேற்றியவர் பாரதிதாசன். பாரதிதாசன் பாடாத பொருள்கள் இல்லை. அவர் ஓர் உலகச் சிந்தனையாளர். தமிழ்ப் பற்றாளர். ஒரு பொதுவுடைமைக் கவிஞர். தமிழையே உயிரெனக் கொண்டு விளங்கிய ஏந்தல்.

வாழ்க்கை வரலாறு

  • 1891  ஏப்ரல் 29, புதன் இரவு 10.15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி.
  • 1895 ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி. இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார்.
  • 1908 முதுபெரும் புலவர் பு . அ . பெரியசாமியிடமும் பின்னர், புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடங்களையும் கற்றல். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். வேணு நாயக்கர் வீட்டுத் திருமணத்தில் பாரதியாரைப் பாவேந்தர் சந்தித்தார்.
  • 1909 கல்வி அதிகாரி கையார் உதவியால் காரைக்காலைச் சார்ந்த நிரவியில் ஆசிரியராகப் பணி ஏற்றார்.
  • 1910 வ.உ.சி-யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த பாவேந்தர் பாரதியார், வ.வே.சு, டாக்டர் வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தார். பாரதியாரின் ‘இந்தியா’ ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். பாவேந்தர் அனுப்பி வைத்த துப்பாக்கியே ஆஷ் கலெக்டரின் உயிரைப் பறித்தது என்பது வரலாறு.
  • 1916 கவிஞரின் தந்தையார் (23-1-1916) இயற்கை எய்தினார்.
  • 1918 பாரதியாருடன் நெருங்கிய பழக்கத்தால் சாதி, மதம் கருதாத தெளிந்த உறுதியான கருத்துக்களால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் கவிதைகள் எழுதினார். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.
  • 1919 திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறை பிடித்த அரசு, தனது தவற்றையுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் கவிஞர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.
  • 1920 இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் – பழனியம்மையை மணந்தார். தம்தோளில் கதர்த்துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றார்.
  • 1926 ஸ்ரீ மயிலம் சுப்பிரமணியர் துதியமுது நூலை இயற்றல்.
  • 1928 தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ..ரா வுடன் இணைதல், பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொளல்.
  • 1929 ‘குடியரசு’ ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதுதல் குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல்பாவலர் என்ற சிறப்புப் பெறுதல்.
  • 1930 பாரதி, புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர் சிறுமியர் தேசியகீதம், தொண்டர் நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு ஆகியவற்றை நூல் வடிவில் வெளியிடல், தொடர்ந்து சஞ்சீவிபர்வதத்தின் சாரல், தாழ்த்தபட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை வெளியிடல்.டிசம்பர், 10-ல் ‘புதுவை முரசு’ கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.
  • 1931 புதுவை முரசு’ (5-1-1931) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை கட்டுரை வரைதல், சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக்கிண்டல் காரன் என்ற பெயரில் வெளியிடல்.
  • 1933 மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடை பெற்ற நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்’ என்று எழுதிக் கையெழுத்திடல்.
  • 1934 இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் ஈ.வெ.ரா பெரியார் தலைமையில் நடைபெற்றது.
  • 1935 இந்தியாவில் முதல் பாட்டேடான ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ தெடங்கினார்.
  • 1938 பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோர் பொருள் உதவியால் வெளியிடுதல். பெரியார் ‘தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர்’ என்று பாராட்டுதல்.
  • 1939 ‘கவி காளமேகம்’ திரைப்படத்திற்குக் கதை உரையாடல் பாடல் எழுதுதல்.
  • 1941 ‘எதிர்பாராத முத்தம்’ (குறுங்காவியம்) காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல்.
  • 1944 பெரியார் ஈ.வெ.ரா முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர்
  • 1945 புதுவை, 95, பெருமாள் கோவில் தெரு, வீட்டை வாங்குதல், தமிழியக்கம் ( ஒரே இரவில் எழுதியது ) நூல் வெளியிடல்.
  • 1946 ‘முல்லை’ இதழ் தொடங்கப்பட்டது. பாவேந்தர் ‘புரட்சிக்கவி’ என்று போற்றப்பட்டு ரூ. 2,000 கொண்ட பொற்கிழியை நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி, பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கினார். 8-11-1946-ல் முப்பத்தேழாண்டு தமிழாசிரியர் பணிக்குப்பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.
  • 1947 புதுக்கோட்டையிலிருந்து குயில் இதழ் வெளியீடு.
  • 1948 குயில் மாத ஏட்டிற்குத் தடை.
  • 1949 பாரதிதாசன் கவிதைகள் 2-ம் தொகுதி வெளியீடு.
  • 1950 திருச்சியில் பாரதிதாசனார்க்கு மணிவிழா.
  • 1955 புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அவைத்தலைமை ஏற்றல்.
  • 1958 ‘குயில்’ கிழமை ஏடாக வெளிவருதல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல்.
  • 1959 திருக்குறளுக்கு ‘வள்ளுவர் உள்ளம்’ என்ற உரை விளக்கத்தை (1-11-59) எழுதுதல்.
  • 1961 சென்னைக்குக் குடிபெயர்தல். ‘பாண்டியன் பரிசு’ கதையைப் படமாக்க முயற்சித்தல்.
  • 1963 – ‘பாரதியார் வரலாறு’ திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல்.
  • 1964 – பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21-ல் இயற்கை எய்தினார். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம்.
  • 1965 – ஏப்ரல் 21 புதுவைக் கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம், புதுவை நகராட்சியினரால் எழுப்பப் பட்டது.
  • 1968 சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது பாவேந்தரின் திருஉருவச்சிலை, சென்னை மெரீனா கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது.
  • 1970 கவிஞரின் ‘பிசிராந்தையார்’ நாடக நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • 1971 ஏப்ரல் 29-ல் பாவேந்தர் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழாவாக இது திகழ்கிறது. புரட்சிக் கவிஞர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95-ஆம் எண் இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிக் கவிஞர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் அமைந்துள்ளன.
  • 1972 ஏப்ரல் 29-ல் புரட்சிக்கவிஞர் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.
  • 1978 எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு முதன் முறையாக பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடியது. அவ்வாண்டு முதல் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’ ( ரூ. 10,000 தொகை – 4 பவுன் தங்கப்பதக்கம் ) வழங்கப்பட்டது. முதன்முதலாக இப்பரிசைப் பெற்றவர் பாவேந்தரின் சீடர் ‘சுரதா’. பாவேந்தர் பெயரில் ‘பாரதிதாசன் பல்கலைக் கழகம்’ அமைத்ததும் எம்.ஜி.ஆர். அரசு தான்.
  • 1990 பாவேந்தர் நூற்றாண்டான இவ்வாண்டு திரைத் துறையில் ‘பாவேந்தர் பரிசு’ என்று முதன் முதலில் ஏற்படுத்தினார் கலைஞர் மு. கருணாநிதி. இவரது தலைமையிலான தமிழக அரசு வழங்கிய ‘பாரதிதாசன் விருதை’ முதன் முறையாகப் பெற்றவரும் பாவேந்தரின் சீடர் ‘சுரதா’ தான்.
  • 1991 கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பாவேந்தரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, பாவேந்தரின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது. பாவேந்தரின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் வழங்கியது.